கன்னியாகுமரியில் முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்துவிட்டு, எடையைச் சரிசெய்ய சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சாந்தகுமார் என்பவர் முந்திரி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முந்திரி கொட்டைகளை வாங்கி வந்து பருப்பை தனியாகப் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு வரும் சாந்தகுமார், தனியார் வாடகை லாரிகள் மூலம் முந்திரி கொட்டைகளை தனது தொழிற்சாலைக்கு எடுத்து வந்துள்ளார்.
அவ்வாறு, முந்திரி கொட்டைகளை ஏற்றி வரும் ஓட்டுநர்கள் அளிக்கும் தனியார் எடை மேடையின் அளவை சரிபார்த்து அவர் இறக்கி வந்துள்ளார்.
இதுபோன்று லோடுகள் வரும்போது அடிக்கடி எடை குறைவது போலத் தோன்றியதால், தூத்துக்குடியில் இருந்து மூன்று லாரிகளில் ஏற்றி வரப்பட்ட முந்திரி கொட்டைகளை இறக்கியபோது 17 மூட்டைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், முந்திரி கொட்டைகளுக்குப் பதிலாக சிமெண்ட் கற்களை ஏற்றிவந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஓட்டுநர்கள் சாந்தகுமார், மதியழகன், சந்துரு ஆகியோரை பிடித்து போலீசில் அவர் ஒப்படைத்தார்.
இதனை அடுத்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், திருடிச் செல்லப்பட்ட முந்திரி கொட்டைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















