வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களைக் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து வகுப்பறையின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை வனப் பகுதிக்கு விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பள்ளி வளாகம் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
















