மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் கழுதைகளை கொண்டு மஹிந்திரா தார் ராக்ஸ் கார் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஜுன்னாரைச் சேர்ந்த கணேஷ் சங்கடே என்பவர் புதியதாக மஹிந்திரா தார் ராக்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய நாள் முதலே அந்தக் கார் தொடர்ந்து பழுதாகி வந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட டீலரிடத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த கணேஷ் சங்கடே, தனது மஹிந்திரா தார் ராக்ஸ் காரை கழுதைகளில் பூட்டி மேளதாளங்களுடன் ஊர்வலமாக டீலரிடம் இழுத்துச் சென்றார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அதனை பகிர்ந்து புகாரை கண்டுகொள்ளாத கார் டீலரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், பலரும் கார் வாங்கியது முதல் தாங்கள் படும் சிரமங்களை ஆதங்கத்துடன் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
















