ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காமில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் எதிர்பாராத விபத்து தான் என்றும், தீவிரவாத தாக்குதல் இல்லை என்றுமு் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்துவிரிவாகப் பார்க்கலாம்இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் காவல்நிலையம், நள்ளிரவு 11.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைப்பற்றிய வெடிமருந்துகள், ஆய்வுக்காக இங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு நாசவேலை அரங்கேறி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்தக் கோர சம்பவத்தில் போலீசார், தாசில்தார் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 300 மீட்டர் வரை உடல்கள் சிதறி கிடக்க, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர். இரவு நேரத்தில் நவ்காம் காவல் நிலையம் வெடித்து சிதறியதால், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சற்று ஆடிப்போய்விட்டது என்றே கூறவேண்டும்.
காரணம், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், நவ்காமிற்கும் ஏகப்பட்ட தொடர்பு உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில், நவ்காம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இந்திய இறையாண்மைக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. சுவரொட்டி ஒட்டியது யார் என்பது குறித்து தோண்டி துருவிய அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர். பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், இந்த மூவர் மீதும் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், போஸ்டர் ஒட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த மூவரையும் தூண்டியதாக மதபோதகரும், மருந்து விற்பனையாளருமான இர்பான் அகமதுவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த அதிகாரிகள், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இங்கு தான் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இர்பான் அகமது உளறிய விவரங்கள், அதிகாரிகளுக்கு தூக்கி வாரி போட்டது என்றே கூற வேண்டும். அதன் பேரிலேயே, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் விரைந்து, மருத்துவர்கள் என்ற போர்வையில் அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் பதுங்கியிருந்த முஸம்மில் ஷகீல், ஷாகீன் சயீத் ஆகிய தீவிரவாதிகளை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிமருந்துகளையும் கைப்பற்றினர். இருந்தும் டெல்லியில் கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து விட, இரவு பகல் பாராமல் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இப்படியான சூழலில் தான், ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள், நவ்காம் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், நள்ளிரவு நேரத்தில் காவல்நிலையம் வெடித்து சிதற, தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற செய்திகள் பரவத் தொடங்கின . இந்நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நவ்காம் காவல்நிலையசம்பவம் விபத்து மட்டுமே, தீவிரவாத தாக்குதல் இல்லை என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஃபரிதாபாத் மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்ற வெடிமருந்து மாதிரிகளை, தடயவியல் மற்றும் வேதியியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த விபத்து நேரிட்டதாகவும், கவனமாக கையாண்ட போதும் துயர சம்பவம் நேரிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் அளித்த பேட்டியிலும், விபத்து என தகவல் தெரிவிக்கப்பட்டதால், நவ்காம் காவல்நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.
















