அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் பயனைத் தங்களுக்கு முழுமையாகக் கொடுக்காமல் அதிகாரிகள் அரசியல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
கொங்கு மண்டலத்தின் 60 ஆண்டு கால கனவுத் திட்டம் அத்திக்கடவு-அவிநாசி திட்டம். பவானிசாகர் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்து மேட்டுப்பகுதிகளான அவிநாசி தொகுதிக்குட்பட்ட 1,400 குளம் குட்டைகளில் நிரப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படைய திட்டம் வகுக்கப்பட்டது. நல்ல நோக்கத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் 50 சதவீத பணிகள் அந்த ஆட்சிலேயே முடிக்கப்பட்டன.
ஆனால் அதற்குப் பின்னர் பொறுப்பேற்ற திமுக அரசுத் திட்டத்தை முறையாகக் கண்காணித்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குளம், குட்டைகளில் பாதி அளவுக்குக்கூட தண்ணீர் வந்து சேரவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உதாரணத்திற்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கண்டுகொள்ளப்படாததால் அன்னூர் தாலுகாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வராமல் 50க்கும் மேற்பட்ட குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவ மழை காலங்களிலும் போதிய அளவில் மழை பெய்யாமல் தண்ணீரின்றி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு போகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நல்ல முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மேலும் சில திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். விவசாயிகள் அதற்கு நெருக்கடி கொடுப்பார்கள். எனவே இந்தத் திட்டத்தை ஃபெயிலியர் திட்டம் எனக் காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியும்கூட இதுவரை இந்தத் திட்டம் முழுமை பெறாததால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டதற்கு காரணம் என்ன? அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அல்லது இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்த எல் அண் டி நிறுவனத்தின் அலட்சியபோக்கா என்பதும் விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.
அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டதன் மூலம் திமுக அரசு தங்களை வஞ்சித்துவிட்டது என்பதே விவசாயிகளின் வேதனைக் குரலாக இருக்கிறது. தங்கள் குமுறலுக்கு திமுக அரசு என்ன தீர்வு சொல்லப் போகிறது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
















