பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா – இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.
பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடையும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, அதிநவீன பாதுகாப்பு தளவாடங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் நாட்டுடன் 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய மதிப்பிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, எதிரி நாட்டு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய MR-SAM ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் மற்றும் இஸ்ரேலின் AERO SPACE INDUSTRIES நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் MR-SAM ஏவுகணைகள், ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. இதற்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அதிநவீன RADIO FREQUENCY உபகரணங்கள் மற்றும் ரேடார்கள் பொறுத்தப்பட உள்ளன.
ஏவுகணைகள் மட்டுமல்ல, ட்ரோன்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்து இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழித்து எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக MR-SAM ஏவுகணைகள் விளங்கும் என ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என தெரிகிறது. போர்க் களத்திற்கு எளிதாக கொண்டு செல்ல முடியும் என்பதால், இந்த எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், MR-SAM ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதால், இஸ்ரேல் AERO SPACE INDUSTRIES நிறுவனம் இந்தியாவிலேயே ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
கடினமான வானிலை சூழ்நிலைகளிலும், எலெட்ரானிக் ஜாமருக்கும் கட்டுப்படாத வகையிலும், MR-SAM ஏவுகணைகள் தயாரிக்கப்படுவது, இந்திய பாதுகாப்புத்துறையில் ஓர் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவிடம் ஆகாஷ் மற்றும் எஸ்- 400 வான்பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்கனவே கைவசம் உள்ள நிலையில், MR-SAM ஏவுகணைகள் இந்திய முப்படைகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ரக ஏவுகணைகளால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், போர் விமானங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது. தரையில் இருந்தவாறே இலக்குளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
வரும் 23-ம் தேதி ஒப்பந்தத்திற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதில் நேரடியாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வான் எல்லையை ஆகாஷ், எஸ்-400 உடன் சேர்ந்து MR-SAM ஏவுகணையும் பாதுகாக்க உள்ளதால், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கிலி ஏற்பட்டுள்ளது.
















