இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமைச் சின்னம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரபல அசாம் பாடலாசிரியா் பூபன் ஹசாரிகா நூற்றாண்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, பூபன் ஹசாரிகாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம் மாநிலம் தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இடம் என்றும், அங்கிருந்து வந்த ஒரு உலகத் தரமான கலைஞரை நாடு முழுவதும் கொண்டாடுவது மிகுந்த பெருமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சி பாரம்பரியக் கலைகளை ஒடுக்க முயன்ற காலத்தில், கலாஷேத்ரா போன்ற நிறுவனங்களே தமது கலாச்சார அடையாளத்தைக் காக்க உதவியதாக கூறினார். மேலும், கலாச்சாரம், பாரம்பரியம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், ராமநாதபுரம் ராஜாவோ, திருபுரசுந்தரியோ ஒரே இடத்திற்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் முழு தேசத்திற்கும் சொந்தமானவர்கள் அதுவே பாரதம் எனவும் தெரிவித்தார்.
















