திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறிகழிவுகளைக் கொட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு கொட்டப்படும் காய்கறி கழிவுகள், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு, விவசாய பணிகளுக்காக உரமாக விற்கப்பட்டது. இந்த உரத்தை வாங்குவதற்காக விவசாயிகள் வரிசை கட்டி நிற்பார்கள்.
இப்படி விவசாய பணிகளுக்கு உபயோகமாக இருந்த அரியமங்கலம் குப்பை கிடங்கு, இன்று அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள் குவிந்து, காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. திருச்சிமாநகராட்சிக்குச் சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கு சுமார் 48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஆனால், இதனை முறையாக மறுசுழற்சி செய்யாததால், 40 அடி உயரத்திற்கு குப்பை மேடாக உருவாகிவிட்டது.
வெயில் காலங்களில் இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அதை அணைப்பதற்குள் தீயணைப்பு வீரர்களுக்குப் போதும் போதுமேன்று ஆகி விடும். இந்த நேரத்தில் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், மூச்சு விடுவதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் உறவினர்கள் தஞ்சம் அடையும் சூழல் தான் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசுபட்டதால், தோல் அலர்ஜி ஏற்படுவதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் குப்பைகள் போதாதென்று இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒருவேளை உணவு கூட நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை… குடிநீர் அருந்த முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் அரியமங்கலம் பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர்.
குப்பைக் கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், இதனால் ஜன்னலை மூடியே வைத்திருக்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்எனக் கோரிக்கை விடுத்துள்ள மக்கள், அரியமங்கலத்தில் இருந்து குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்றும் பணியில் அரசு இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















