திருப்பூர் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஃபிரைட் ரைஸ் தரத் தாமதமானதால், காசாளர் மண்டையை உடைத்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே தனியார் உணவகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார்.
அப்போது, தனக்கு பிறகு வந்தவர்களுக்கு ஃபிரைட் ரைஸ் வழங்கப்பட்டதாகவும், தனக்கு உணவு வழங்கவில்லை எனவும் கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, நண்பர்களை தொலைபேசி மூலம் வரவழைத்ததோடு அனைவரும் சேர்ந்து உணவகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் காசாளரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்போது, உணவகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கௌதமை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளுடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கௌதமை கைது செய்தனர்.
மேலும், தப்பியோடிய அவரது நண்பர்கள் 6 பேரை தேடி வருகின்றனர். உணவகத்தில் இது போன்று தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருப்பூர் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















