கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவினருடன், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப் படி வெண்ணைமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கோயிலின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சியினரும் மக்களின் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதில் காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்றிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரும் வந்தனர்.
அதிமுகவின் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அக்கட்சியினரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாகப் போலீசார் இருந்தும் அப்பகுதியில் சிறிது நேரம் அசாதாரண சூழல் ஏற்பட்டது.
















