பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்றிருந்த சீக்கிய பெண் ஒருவர், அந்நாட்டில் மாதமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நாட்டிற்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள வருபவர்களை குறிவைத்து பாகிஸ்தான் மதமாற்றத்தில் ஈடுபடுவது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சீக்கிய மதத்தை நிறுவியவரான குருநானக் தனது கடைசி 18 ஆண்டுகளைக் கர்தார்பூர் என்ற பகுதியில் கழித்தார். அந்த ஊர் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. அங்குக் கட்டப்பட்டுள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் என்ற ஆலயம், சீக்கிய மக்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சீக்கியர்கள் இந்தியாவில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குருநானக்கின் 555ஆவது பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்து 992 யாத்திரிகர்கள், நவம்பர் 4ம் தேதி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் நவம்பர் 13ம் தேதி நிறைவடைந்ததையடுத்து, யாத்திரிகள் குழு இந்தியா திரும்பியது.
வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, சரப்ஜீத் கவுர் என்ற பெண் மாயமாகியுள்ளார் என்பது. உடனே அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. பாகிஸ்தானில் அவர் மாயமானதால், அவரைக் கண்டுபிடிக்கச் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில்தான், மாயமான சரப்ஜீத் கவுர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி, பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
லாகூரில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் ஹூசேன் என்பவரை அவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தனது பெயரை அவர் நூர் ஹூசைன் என மாற்றிக்கொண்டதாகவும், முழு சம்மதத்துடன்தான் மாத மாற்றம் நடைபெற்றதாகவும் பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக ஷேக்புரா என்ற பகுதியில் உள்ள மசூதியில் பெறப்பட்ட மாதமாற்ற ஆவணங்களை முன்வைக்கிறது. ஆனால், இந்த மத மாற்றத்திற்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் யாத்திரிகள் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டு வருவதாவும், அவர்களில் எளிய இலக்குகள் கண்டறியப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாத்திரிகளை தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் உள்ளூர் ஆட்கள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கும் அதிகாரிகள், யாத்திரிகளில் குறிப்பிட்ட சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவதாகக் கூறுகின்றனர்.
தங்கும் விடுதிகள், ஆலயங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களிலும், பயணத்தின்போதும் இந்த மூளைச்சலவை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதில் ஈடுபடுவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், இவர்களுக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ துணையாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நான்கானா சாஹிப், பஞ்சா சாஹிப், கர்தார்பூர் சாஹிப் போன்ற புகழ்பெற்ற சீக்கிய ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் வரும் பயணிகள் தொடர்ச்சியாகப் பின்தொடரப்பட்டு, பின்னணி ஆராயப்பட்டு மதமாற்றம் நடைபெறுவதாகவும், மதமாற்றத்திற்கு பின்னர் இந்தியாவுடனான உறவை துண்டித்துகொள்ள அவர்கள் வற்புறுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இப்படி மதமாற்றம் செய்யப்படுவர்களிடம் இருந்த குடும்பம், சமூகம், பிராந்தியம் உள்ளிட்டவை சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு, அவை உளவுத்துறை சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பாகிஸ்தானுக்கு செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், அங்குள்ளவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாகச் செயல்படவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
















