X-CHAT என்ற புதிய MESSAGING தளத்தை உருவாக்கியுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அதனை WHATSAPP மற்றும் ARATTAI போன்ற செயலிகளுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சற்று விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் நிறுவனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தொழில்நுட்பத் துறையில் பல முன்னணி நிறுவனங்களை தொடங்கி வருவதுடன், ஏராளமான விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களையும் உருவாக்கி வருகிறார்.
இதன் மூலம், உலகளாவிய மின்னணு வாகனங்கள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதுமை சார்ந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் மஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில், தற்போது X CHAT என்ற புதிய MESSAGING தளத்தையும் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது பிரபல MESSAGING தளங்களான WHATSAPP மற்றும் ARATTAI போன்ற செயலிகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டு உள்ளது. தனியுரிமை பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இந்தச் செயலி, வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதை உறுதிபடுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தச் செயலியில் DIRECT MESSAGE-களை SCREEN SHOT எடுக்க முடியாது என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
XAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, தற்போது X சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தச் செயலியில் அனைத்து தகவல் தொடர்பும், END TO END ENCRYPTION முறையில் இருப்பதால், தகவல்களை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே அதனைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறுஞ்செய்திகள், கோப்புப் பகிர்வு மற்றும் குழுச் சந்தைகள் போன்றவற்றை பாதுகாப்பாகப் பகிர முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. X-CHAT-ல் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளைத் திருத்தவும், அழிக்கவும் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் தானாக அழியும்படி அமைவுகளை வடிவமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, WHATSAPP செயலியைப் போல் அல்லாமல், X-CHAT-ல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளில் “இந்தச் செய்தி அழிக்கப்பட்டது” என்ற குறிப்பு காட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், DISAPPEARING MESSAGES வசதியில், குறிப்பிட்ட காலத்திற்கு பின் அனைத்து குறுஞ்செய்திகளும் தானாகச் சர்வரில் இருந்தே அழிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த SCREEN SHOT எடுக்க முடியாத வகையில் அமைவுகளை மாற்றி அமைக்கலாம் என்றும், SCREEN SHOT எடுக்க முயலும் நபரை அடையாளம் காட்டும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், X-CHAT-ல் விளம்பரங்கள் எதுவும் வராது எனவும், பயனர்களின் தரவுகள் எதுவும் சர்வர்களில் சேகரிக்கப்பட மாட்டாது என்றும் சம்மந்தப்பட்ட நிறுவனம் உறுதி அளித்துள்ளது. கூடுதலாக DIRECT MESSAGE-கள் மற்றும் புதிய X-CHAT சந்தைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால், இது பயனர்களின் அனுபவத்தை எளிதாக ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VOICE MEMO வசதியும் X-CHAT செயலியில் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு இதனை X-CHAT IOS மற்றும் WEBSITE வாயிலாகப் பயனர்கள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி விரைவில் ANDROID செல்போன்களிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என X நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், இதனுடன் X-MONEY-ஐயும் இணைத்து, X-ஐ எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய ஒரே வலைதளமாக மாற்றும் திட்டமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
















