மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு வங்கதேச அரசுக் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேச போராட்டத்தின்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
வன்முறையைத் தூண்டிவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச வெளியுறவுத் துறை கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவருக்கு அடைக்கலம் வழங்குவது நட்பற்ற செயல் எனவும் அதனால் ஷேக் ஹசீனா நாடு திரும்புவதை உறுதி செய்வது இந்தியாவின் கடமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வங்கதேசத்தின் கடிதத்திற்கு இந்திய அரசு பதிலளித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், அதில் அமைதி, ஜனநாயகம், மற்றும் ஸ்திரத்தன்மை அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் ஆக்கப்பூர்வமாக நடந்து கொள்ளும் எனவும் இந்தியா கூறியுள்ளது.
















