அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
அதன்படி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவை சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெய்சங்கர், உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம் எனக் கூறினார்.
அமைதியை நிலைநாட்டும் இலக்கை அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக அணுகுவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா-ரஷ்யா உறவுகள் நீண்ட காலமாகச் சர்வதேச உறவுகளில் ஸ்திரத்தன்மைக்கு ஒரு காரணியாக இருந்து வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
















