கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை எல்லையாகக் கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் கட்டுமானங்களும் வனப்பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்திக் கொண்டிருந்த வனவிலங்குகள் தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாகவும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.
அதிலும் யானைகளின் வழித்தடங்கள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிக்கப்பட்டிருப்பதால், உணவுக்கு வழியின்றி ஊருக்குள் செல்ல வேண்டிய சூழலுக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் என்பதால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தங்களின் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
மனிதர்களை விலங்குகளிடமிருந்தும், விலங்குகளை மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையே மனித விலங்குகள் மோதலுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த 1200-க்கும் அதிகமான வேட்டைத் தடுப்பு காவலர்களில் சுமார் 800 பேர் பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அப்பணிக்கு தேவையான மாற்று காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஓய்வுபெற்ற வனப்பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள், விவசாயப் பயிர்களை வனவிலங்குகளிலிடமிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, வனப்பகுதிக்கு தேவையான வேட்டைத் தடுப்பு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















