சவுதி அரேபியாவில் நடந்த கோர வாகன விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 42 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஹைதராபாத்தில் இருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியாகியிருப்பது நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
சவுதி அரேபியாவில் உள்ள மெதினா நகருக்கு சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 43 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், டீசல் டேங்கரும் நேருக்கு நேர் மோதிக் கோர விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமான நிலையில், அதிலிருந்த பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால், அவர்கள் அனைவரும் உயிர் தப்ப வழியின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே நேரத்தில், இந்த விபத்தில் முகமது அப்துல் ஷொயப் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவில் இருந்து மெதினாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட போது இந்த விபத்து அரங்கேறியதாகவும், இதில் இந்தியாவைச் சேர்ந்த 42 பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும் அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட் உள்ளது.
அவர்களில் ஹைதராபாத்தில் இருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் உட்பட, 18 பேர் பலியாகி உள்ளது நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் அனைவரும் வரும் 22-ம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டிருந்ததாக, உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு முன்பு வரை அவர்கள் தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிட்ட உறவினர்கள், ஒரே விபத்தில் 3 தலைமுறையினர் அடங்கிய 18 பேரை பறி கொடுத்திருப்பது தங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நாசீருத்தீன், அவரது மனைவி அக்தர் பேகம், மகன் சலாவுதீன், மகள்கள் அமீனா, ரிஸ்வானா மற்றும் ஷபானா மற்றும் அவர்களின் பிள்ளைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் விபத்தில் பலியான நிலையில், அந்தப் பகுதி நாலாப்புறங்களிலும் அவர்களது உறவினர்களின் அழுகுரல் ஓலங்கள் எதிரொலித்தன.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்திய தூதரகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, இந்தக் கோர விபத்தில் அதிகளவு இந்திய பயணிகள் உயிரிழந்துள்ளதால், ஜெட்டாவில் உள்ள தூதரகமும் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை நிறுவி, 80024 – 40003 என்ற அவசர உதவி எண்ணையும் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புனித யாத்திரையாகத் தொடங்கிய இந்தப் பயணம், பல குடும்பங்களின் வாழ்வில் அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
















