ஜெயிஷ்-இ-முகமத் அமைப்பின் தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், “OPERATION D-6” என்னும் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி, பல நகரங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு, இந்தியாவிற்குள் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. அண்மையில் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த சில சந்தேக நபர்களை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவர்கள் “OPERATION D-6” என்னும் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றும் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக NIA தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாபர் மசூதி நினைவு தினமான டிசம்பர் 6-ம் தேதி நாட்டின் பல நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்த நிலையில், செங்கோட்டை அருகே நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் அதற்கான முன்னோட்டமாக இருந்ததாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிபொருட்கள் நிறைந்த காரைப் பயன்படுத்தி டிசம்பர் 6-ம் தேதி, இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை நடந்த பயங்கரவாதிகள் முடிவு செய்திருந்த நிலையில், அந்தத் திட்டம் புலனாய்வு அமைப்புகளின் தீவிர நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மருத்துவர் உமர் உன் நபியும், கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் ஷயீதும் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் ஷயீத் இந்தியாவில் “ஜமாஅத் உல் மோமினீன்” என்ற பெயரில், ஜெயிஷ் பெண்கள் பிரிவை நிறுவிச் செயல்படுத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்தேக நபர்களான உமர் நபி மற்றும் அவரது உதவியாளரான அமீர் ஆகியோர், செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்தியது NIA-வால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உமர் நபி பல மணிநேரமாகக் காரில் வெடிபொருட்களுடன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததற்கு ஆதாரமாக, 40 சிசிடிவி கேமரா பதிவுகள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்ட சிலருக்கு இதில் தொடர்பில்லாதது உறுதியானதால் அவர்களை விடுவித்துள்ளதாக NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், உமர் நபியின் சதித்திட்டம் அவரது உதவியாளரான முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டவுடனேயே தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். ஷகீலின் அறையில் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள NIA அதிகாரிகள், இந்தச் சதிச்செயலில் மேலும் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து, பல போலீஸ் பிரிவுகளும், மைய குழுக்களும் தங்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
















