பிரதமர் மோடி கோவைக்கு வருகை தருவதை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்த உள்ளார்.
பின்னர், நடைபெறும் நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.
அதனை தொடர்ந்து, கோவை வரும் அவர், பிற்பகல் 1.30 மணியளவில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், நாட்டில் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக 18 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்து உரையாற்ற உள்ளார்.
இதனிடையே தமிழக பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
















