செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சித்தேரி உராட்சிக்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் ஏரியின் நடுவே 120 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர்கள் எந்தத் துறைகள் சார்பிலும் பாலம் அமைக்கப்படவில்லையெனத் தெரிவித்தனர்.
விசாரணையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர், பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து, பல ஆயிரம் வீடுகளுடன் கூடிய குடியிருப்பை உருவாக்க உள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனம் மேம்பாலம் அமைத்து வருவதும் தெரியவந்துள்ளது.
எனவே ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் இப்பணியை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















