இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி கோவை வருகை தந்தார்.
விமான நிலையம் வந்தடைந்த பிரதமரைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சாமிநாதன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து, சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த பிரதமர் மோடியை வழி நெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மலர்களைத் தூவியும், பிரதமரைக் கண்டு கை அசைத்தபடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொடிசியா வளாகம் சென்றடைந்த பிரதமர் மோடி, இயற்கை வேளாண் கண்காட்சியைப் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த விவசாய பொருட்கள் பற்றி பிரதமர் மோடியிடம் விவசாயிகள் விளக்கினர்.
இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாகக் கலை நயம் மிக்க மாட்டு வண்டி மாதிரி வழங்கப்பட்டது.
இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவித்தார். இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா 2 ஆயிரம் ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கப் பாடுபடுவோருக்கு பிரதமர் மோடி விருது வழங்கிக் கௌரவித்தார். 18 விவசாயிகளுக்கு விருது வழங்கித் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் தங்கள் துண்டைச் சுழற்றிக் கொண்டிருந்ததை பார்க்கும்போது, பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ எனத் தோன்றுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக விழா மேடையில் பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனின் உரையைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சிறு வயதில் தமிழ் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், தானும் தமிழில் பேசி மகிழ்ந்திருப்பேன் எனக் கூறினார்.
பி.ஆர்.பாண்டியனின் பேச்சு அருமையாக இருந்ததெனப் புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது உரையை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்குமாறு ஆளுநர் ரவியை அறிவுறுத்தினார்.
















