மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மாத்வி ஹிட்மா உள்பட 6 பேரைப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகியுள்ள நிலையில், இது இடது சாரி தீவிரவாதத்திற்கு மரண அடியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அண்மை காலமாக இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று அண்மையில் கூறியிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதற்கேற்ப, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது பாதுகாப்புப்படை.
அதன் எதிரொலியாக இந்த ஆண்டில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் திருந்தி வாழ்கின்றனர்… இந்த நிலையில்தான் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதியான மாத்வி ஹிட்மா, அவரது மனைவி உள்பட 6 பேரைப் பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது.
ஆந்திரா-சத்தீஸ்கர்- ஒடிசா எல்லைக்கு அருகே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.. அதன் பேரில், ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தது. அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டு தளபதி மாத்வி ஹிட்மா, அவரது மனைவி ராஜே உள்ளிட்ட 6 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
1981 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பிறந்த ஹிட்மா, மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் (PLGA) பட்டாலியன் எண் ஒன்றின் தலைவராக இருந்தவர். பஸ்தார் பிராந்தியத்திலிருந்து மாவோயிஸ்ட குழுவில் இணைந்த ஒரே பழங்குடியினராகவும் அறியப்படுகிறார்.
43 வயதான மாத்வி ஹிட்மா, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடந்த 26 தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு 76 சிஆர்பிஎஃப் வீரர்களை பலி கொண்ட தண்டேவாடா தாக்குதல், 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் உயர் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்ட ஜிராம் தாக்குதல், 2021ம் ஆண்டு 22 பாதுகாப்புப் படையினர் பலியான சுக்மா – பிஜாப்பூர் மோதல் போன்றவற்றில் ஹிட்மா முக்கிய பங்காற்றியவர்.
ராணுவ உத்தி, கொரில்லா தாக்குதல், வனத்தை பற்றிய புரிதல் போன்ற காரணங்களால் ஆபத்தான மாவோயிஸ்டு தளபதியாகத் திகழ்ந்த இவர், இத்தனை வருடங்கள் பாதுகாப்புப் படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். மாத்வி ஹிட்மாவின் என்கவுன்ட்டர் சிபிஐ-மாவோயிஸ்டுக்கு பலத்த அடியாக, மாவோயிஸ்டு தலைமையை பலவீனப்படுத்தும நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
மாவோயிஸ்டுகளை வேட்டையாடப்படும் நடவடிக்கைகளால், சிபிஐ-மாவோயிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ, தொடர் இழப்புகளைச் சந்தித்து வருகிறது… கடந்த மே மாதம் கட்சியின் பொதுச்செயலாளர் நம்பலா கேசவராவ், அக்டோபரில் மல்லோஜூலா வேணுகோபால் ராவ் ஆகியோர் சரணடைந்தது அந்த அமைப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆபரேஷன் சாகர் நடவடிக்கையின் தாக்கத்தால் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கணிசமாகக் குறைந்த நிலையில், எஞ்சியிருக்கும் மாவோயிஸ்ட் தலைமை தப்பிக்க இடம் இல்லாமல் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் மாவோயிஸ்டுகளின் திறன் மிகுந்த தளபதி மாத்வி ஹிட்மாவின் என்கவுன்ட்டர், எஞ்சிய மாவோயிஸ்டுகளை நடுநடுங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















