இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை நிறுத்தி வைத்துள்ளது ஈரான். அதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானும், இந்தியாவும் ராஜதந்திர ரீதியாகச் சுமுகமான உறவைப் பேணுகின்றன. ஈரானின் கலாச்சாரம், வரலாற்று பாரம்பரியத்தைக் காண இந்திய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும நோக்கில், 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது ஈரான்.
அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஈரானுக்கு விசா இல்லாமல் சென்று வர முடிந்தது. ஆனால் இந்தச் சலுகையைத் திடீரென நிறுத்திவைத்தது ஈரான்… இந்திய பயணிகள் இனி விசா இன்றி ஈரானுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த மே மாதம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பஞ்சாபைச் சேர்ந்த மூன்று பேர் ஈரானில் கடத்தப்பட்டதன் எதிரொலியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் உள்ள ஏஜென்ட் ஒருவர், துபாய்-ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஹுஷான்பிரீத் சிங், ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோரை ஈரான் அழைத்து வந்துள்ளார்.. மே 1ம் தேதி அவர்கள் ஈரானில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் கடத்தப்பட்டுள்ளனர்… ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை கேட்டும் மிரட்டப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஈரான் அதிகாரிகள் தலையிடுமாறு, இந்தியா வலியுறுத்திய நிலையில், கடத்தப்பட்ட மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும், போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் சுற்றுலா விசாவில் ஈரான் வந்து ஏமாறுவதும், குற்றவாளிகள் விசா சலுகையை தவறாகப் பயன்படுத்தி வருவதும் தொடர் கதையானது… இதனைத் தடுக்க, சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் விசா சலுகையைத் தள்ளுபடி செய்வதாக ஈரான் அறிவித்தது.
இந்த நிலையில், ஈரான் செல்ல விரும்பும் அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சம் எச்சரித்துள்ளது. விசா இல்லாத பயணம் அல்லது ஈரான் வழியாக மூன்றாம் நாடுகளுக்குப் போக்குவரத்து வழங்கும் முகவர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
















