பல ஆண்டுகளாகவே, சீன வங்கிகளிடம் கடன்களை வாங்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்து வந்த அமெரிக்கா, சீனாவிடம் அதிக அளவில் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் மிகப்பெரிய கடன் வழங்கும் நாடாகச் சீனா உருவாகி உள்ளது. ஆப்பிரிக்காவில் சாலைகள், தென் அமெரிக்காவில் துறைமுகங்கள் மற்றும் மத்திய ஆசியாவில் ரயில் பாதைகள் என உலகில் உள்ள அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளுக்கும் சுமார் 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களை சீனா வழங்கியுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 30,000-க்கும் மேற்பட்ட சீன திட்டங்களிலிருந்து தகவல்களைப் பெற்று தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை சர்வதேச கடன் வழங்குநராகச் சீனாவின் வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
மொத்தத்தில், சீன அரசுக்குச் சொந்தமான நிதி நிறுவனங்கள் 2000ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் $2.2 ட்ரில்லியன் கடன்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க நிறுவனங்களுக்கும் மற்றும் திட்டங்களுக்கும் 200 பில்லியன் டாலர்களை கடனுதவியாகச் சீனா வழங்கியுள்ளது என வர்ஜீனியாவின் வில்லியம்ஸ்பர்க்கில் உள்ள வில்லியம் மற்றும் மேரி கல்லூரியின் ஆராய்ச்சி நிறுவனமான AidData தெரிவித்துள்ளது.
எரிவாயு குழாய்கள், தரவு மையங்கள் மற்றும் விமான நிலைய முனையங்களை அமைப்பதற்கு சீனா பெருமளவில் கடன் வழங்கியுள்ளது. மேலும், டெஸ்லா, அமேசான், டிஸ்னி, போயிங் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கான பெருநிறுவன நிதியுதவியையும் சீனா செய்துள்ளது. அமெரிக்காவுக்குச் சீனா வழங்கிய பல கடன்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதாவது கடன் தொகை முதலில் கேமன் தீவுகள், பெர்முடா, டெலாவேர் மற்றும் பிற இடங்களில் உள்ள ஷெல் நிறுவனங்கள்மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், பெரும்பாலான கடன்கள் அமெரிக்க வணிகங்களில் பங்குகளை வாங்குவதற்காகச் சீன நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர், பயோடெக் உட்பட முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து சீனா கடன் வழங்கியுள்ளது.
சீன அரசு வங்கி நிதியுதவி அமெரிக்கா முழுவதும், சொல்லப்போனால் வடகிழக்கு அமெரிக்கா, கிரேட் லேக்ஸ் பகுதி, மேற்கு கடற்கரை மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் உள்ள திட்டங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 2015ம் ஆண்டில், சீன அரசுக்குச் சொந்தமான வங்கிகள், ஐயன்ஷோரில் 80 சதவீத பங்குகளை வாங்குவதற்காக ஒரு தனியார் அமெரிக்க நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் டாலர் கடன் கொடுத்தன. இந்த அமெரிக்க காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் CIA மற்றும் FBI அதிகாரிகளும் அமெரிக்க சிறப்பு ரகசிய ஏஜெண்ட்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டு, “மேட் இன் சீனா 2025” என்ற திட்டமும் வெளியிடப்பட்டது. மேலும், 10 ஆண்டுகளில் 70 சதவீத தன்னிறைவை அடைய செமிகண்டக்டர், உயிரி தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற 10 உயர் தொழில்நுட்பத் துறைகளின் பட்டியலையும் சீனா வெளியிட்டது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் வளரும் நாடுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களை சீனா வழங்கியுள்ளது. 2016ம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, மிச்சிகனில் ஒரு ரோபாட்டிக்ஸ் உபகரண நிறுவனத்தை வாங்க உதவுவதற்காக 150 மில்லியன் டாலர் கடன் வழங்கியது. அதே ஆண்டில், எல்லை தாண்டிய கையகப்படுத்தல் கடன்களுக்கான சீனாவின் நிதியுதவி 46 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக ஆக உயர்ந்தது.
வளரும் நாடுகளில் சீனாவின் நிதியுதவியில் பெரும்பாலானவை பெரிய திட்டங்களுக்கான அரசு கடன்களாக உள்ளன. சீனாவிடம் கடன் வாங்கும் நாடுகள் கடனை த் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குச் சென்றதால், அந்தக் கடன்கள் அவசரகால கடன்களுக்கு அதிகளவில் மாற்றப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு முதல், உலகளாவிய ஒரு நிதி அதிகார மையமாக மாறிய சீனா, சமீபத்தில் ஏழை நாடுகளுக்குக் கடன் வழங்குவதைக் குறைத்துள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற அதிக வருமானம் கொண்ட பணக்கார நாடுகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்கா தான் பெருமளவில் சீனாவிடம் கடன் வாங்கியுள்ளது. இந்த ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 4.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் அதே சமயம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது. உலக நுகர்வில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உற்பத்திகள் இல்லை.
எனவே, இறக்குமதிகள் இல்லாமல் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அமெரிக்கா, கடன்கள் இல்லாமல் வாழ முடியாத நிலைக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவை ஒரு சந்தை என்பார்கள்.ஆனால் உற்பத்தி இல்லாத சந்தை ஒரு சக்தியாக இருக்க முடியாது. எல்லாவற்றையும் சாப்பிடும் அமெரிக்கா சமைக்கத் தெரியாத ஒரு பேரரசாக ஜொலிக்கிறது. சீனாவுடனான வர்த்தக போரில் அமெரிக்காவுக்கே பெருநஷ்டம் என்றும் ட்ரம்பின் ஆணவமும் அறியாமையும் அமெரிக்காவில் எஞ்சியிருப்பதையும் அழித்துவிடும் என்றும் புவிசார் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
















