விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற டேக்வாண்டோ வீராங்கனை தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்த தாம், விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கிடையே நிலவும் போட்டி காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2024 பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு விண்ணப்பித்தும் விளையாட அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, திறமை இருந்தும் வீராங்கனை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.
விளையாட்டு துறையில் சாதித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக செயல்பட வேண்டும் என்றும், விளையாட்டுக்கு தொடர்பில்லாத பலர் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால் திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால்தான் நம் நாடு விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க முடியவில்லை எனக்கூறிய நீதிபதி, வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் நம்மால் ஒரு தங்கப்பதக்கம் கூட பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
















