சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இன்று முதல் வரும் 24ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் எனத் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், 3வது நாளிலும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவைவிட அதிகரித்து காணப்பட்டது.
சபரிமலை கூட்டநெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தேவசம் போர்டு சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. அதன்படி, வரும் 24ஆம் தேதிவரை 5 ஆயிரம் பேருக்கும் மட்டும் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களில் 20 ஆயிரம் பேருக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்கள் மறுநாளில்தான் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் நாள்தோறும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















