எஸ்ஐஆர் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் போலி பிரசாரத்தை பரப்பி வருவதாகப் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒற்றுமை யாத்திரை நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்திலிருந்து மகாலிங்கபுரம் வரை சென்ற ஒற்றுமை யாத்திரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, கோவையில் உள்ள 25 லட்சம் மக்கள் தொகையில் 6 லட்சம் பேர் நாள்தோறும் மெட்ரோவை பயன்படுத்துவார்கள் என்ற சாத்தியமற்ற தகவலைக் கொடுத்ததால்தான் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாகக் கூறினார்.
கோவையில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று விடலாம் எனக்கூறிய அவர், விலை அதிகமாக உள்ள மெட்ரோவை மக்கள் பயன்படுத்தமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், 2 மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக மேற்கொள்ளும் எனவும் எஸ்.ஜி.சூர்யா கூறினார்.
















