எந்த நிலப்பரப்பையும் தடையின்றி தாண்டி செல்லும் அதிநவீன BvS-10 ராணுவ வாகனங்கள் இந்திய தரைப்படையை வலுப்படுத்த உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்தக் கவச வாகனங்கள் விரைவில் இந்திய எல்லைகளை பாதுகாக்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மலைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற கடினமான நிலப்பரப்புகளை கடந்து போர்க்களத்திற்கு விரைந்து செல்லும் வகையில், BvS-10 என்ற ராணுவ கவச வாகனங்களை, பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE systems நிறுவனத்திடமிருந்து இந்தியா வாங்குகிறது. BvS-10 ராணுவ வாகனங்கள், BAE systems நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கீழ் பெறப்பட்டு Larsen & Toubro நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.
மொத்தம் 18 BvS-10 வாகனங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பெற்றிருப்பதாக Larsen & Toubro நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகமானது, BAE systems நிறுவனத்தில் இருந்து அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கக் கூடிய ‘BvS10’ வாகனங்களை இந்திய ராணுவத்திற்காக வாங்கும், பின்னர் இவற்றை L&T தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கும்.
இவை இந்திய ராணுவத்தில் இணையும் போது சிந்து என்றே அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் BvS-10 வாகன சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக BAE systems நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர், டேரன் ரெஸ்டாரிக் உறுதிபடுத்தினார்.
எனினும் அந்த வாகனங்களுக்கான ஒப்பந்த விலை என்னவென்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.. BvS10 தற்போது ஆஸ்திரியா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், உக்ரைன் நாடுகளில் சேவையில் உள்ள நிலையில், ஜெர்மனியும் விரைவில் அந்தப்பட்டியலில் இணைய உள்ளது.
மலைகள் முதல் சதுப்பு நிலங்கள் வரையிலான கடினமான நிலப்பரப்பில், இந்திய ராணுவம் BvS10 ‘சிந்து’ வாகனங்களை பயன்படுத்தும். இந்த 18 வாகனங்களும் ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையாக இருக்கக்கூடும் எனப் பிரேக்கிங் டிஃபென்ஸ் கூறியுள்ளது.
மேலும், இந்த வாகனங்கள், துருப்புகளை ஏற்றிச் செல்ல மட்டுமல்லாமல், ஆம்புலன்ஸாக, மீட்பு வாகனமாக, தளவாடங்களை ஏற்றிச் செல்ல எனப் பல்வகை பயன்பாட்டுக்கும் ஏற்றது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் BvS-10 வாகனங்கள், ராணுவத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
















