கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜே 15 எனும் புதிய ரக பப்பாளி சாகுபடியின் மூலம் நிறைவான விளைச்சலை விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் ஜே 15 ரக பப்பாளி குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி, பப்பாளி விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வரை ரெட்லேடி எனும் பப்பாளி சாகுபடியை மேற்கொண்டிருந்த விவசாயி துரைசாமி, நடப்பாண்டில் மகாராஷ்டிராவில் இருந்து ஜே 15 எனும் புதிய ரக பப்பாளியை இறக்குமதி செய்து விளைவித்து வருகிறார். நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் அதிகளவு விளைச்சல் கிடைப்பதால் நல்ல வருமானம் ஈட்ட முடிவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் 10 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி விவசாயத்தை செய்துவந்த துரைசாமிக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் தான் அவர் புதிய ரகத்தை தேடிச் செல்லும் சூழலை உருவாக்கியது. ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் மூலம் ஜே 15 எனும் புதிய ரகத்தை தேர்வு செய்த விவசாயி துரைசாமிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. நோய்த் தாக்குதலின்றி விளையும் பப்பாளி பழங்களை சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட ரெட்லேடி ரக பப்பாளியை வாங்கினால், சந்தைக்குச் செல்வதற்குள்ளாகவே கெட்டு விடும் எனவும், ஜே 15 ரக பப்பாளியை பொறுத்தவரை எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் மற்ற வியாபாரிகளும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
விவசாயி துரைசாமிக்கு கிடைத்த பலனின் தொடர்ச்சியாகக் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கவனமும் ஜே 15 பப்பாளி ரகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. தங்களுக்கான வருமானத்தோடு வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொள்ளும் வகையில் காலத்திற்கு ஏற்ப விவசாயத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் விவசாயிகள் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
















