அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு முன்பாகவே நக்சல் இல்லா பாரதத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியுள்ளது. நாட்டில் மாவோயிஸ்டுகளின் வீழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எவ்வாறு திட்டமிட்டார்? எப்படியெல்லாம் வேரறுத்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகள் நேபாளத்தின் பசுபதிநாத்திலிருந்து ஆந்திராவில் திருப்பதி வரை ஒரு சிகப்பு வழித்தடத்தை அமைத்திருந்தனர். சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார்என பல்வேறு மாநிலங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல்களின் பிடியில் சிக்கி இருந்தது.
இடதுசாரி பயங்கரவாதம் அதிகாரப்பூர்வமாக 1967ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆயுதமேந்திய விவசாயிகள் கிளர்ச்சியாகத் தொடங்கியது. 2000ம் ஆண்டு நாட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களுக்கு நக்சல் இயக்கம் பரவியது. 2009ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இடதுசாரி பயங்கரவாதத்தை நாட்டின் “மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு, நாட்டின் பிரதமராகப் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும், நக்சல் இல்லா நாட்டை உருவாக்கும் திட்டம் கொண்டுவரப் பட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் முற்றிலுமாக மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதியான வரைபடம் தயாரிக்கப்பட்டது. சொன்னதை சொன்ன தேதிக்கு முன்பே உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திக் காட்டியுள்ளார். கடந்த நவம்பர் 30ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு 12 நாட்களுக்கு முன்னதாகவே நக்சல் தலைவர் ஹிட்மா கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் நக்சல் வன்முறை சம்பவங்கள் 52 சதவீதமும், மாவோயிஸ்ட் வன்முறையில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 70 சதவீதமும், நக்சல் வன்முறையில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 68 சதவீதமும் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஓராண்டில் 287 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 837 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 300 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100 க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 900க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளனர். நக்சல் பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது.
உண்மையில் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாகத் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது. முரண்பாடாக, நக்சலிசத்தை ஆதரிக்கும் அறிவுஜீவி எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் மெட்ரோ நகரங்களின் மையப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
மேலும் தங்கள் வீடுகளுக்குக் காவல்துறையினரின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்கிறார்கள். மாவோயிஸ்டுகளைக் கொல்வதை எதிர்க்கும் இவர்கள், மாவோயிஸ்டுகளால் பொதுமக்கள் கொல்லப்படுவதை பாராட்டுகிறார்கள். நகர்ப்புற வாழ்க்கையின் ஆடம்பரங்களை அனுபவிக்கும் இந்த URBAN இடதுசாரிகள், கிராமங்களிலும் காடுகளிலும் வறுமையில் வாடும் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
நக்சலைட்டுகளின் மனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், நக்சலைட்டுகளால் பாதிக்கப்படுபவர்களின் மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை. , நாடு முழுவதும் மாவோயிஸ்ட்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கிய இடதுசாரி சித்தாந்த சுற்றுச்சூழல் அமைப்பையே நேரடியாகச் சவால் விட்டுப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒழித்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டுச் சரணடையாத மாவோயிஸ்டுகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது என்ற சிவப்பு கோட்டை மத்திய அரசு வரைந்தது. ஆபரேஷன் கிரீன் ஹன்ட், ஆப்ரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் என நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப் பட்டன. கடந்த 11 ஆண்டுகளில் இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குறிப்பிடத் தக்க உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன.
4,618 கி.மீ சாலைகள் கட்டி முடிக்கப்பட்டன. 1 7,768 மொபைல் கோபுரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. 1,007 வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. 1000 ஏடிஎம்கள் அமைக்கப்பட்டன. 179 ஏக்லவ்யா மாதிரிக் குடியிருப்பு பள்ளிகளும் 850 பொது பள்ளிகளும் செயல்பாட்டுக்கு வந்தன. 600க்கும் மேற்பட்ட பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்கள் இயங்க ஆரம்பித்தன.
நக்ஸல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. வளர்ச்சியும், சட்டம் ஒழுங்கும் கைகோர்த்துச் செயல்படும் நிலையில், இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மூலம், கொலை செய்பவரை விடக் காப்பாற்றுபவர் பெரியவர் என்ற செய்தியை நக்சலைட்டுகளுக்குப் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் புரிய வைத்துள்ளனர் என்ற கூறலாம்.
















