பூமியை கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாக்கும் கவசமாகக் காந்த புலம் செயல்பட்டு வருகிறது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் காந்தக் கவசம் பலவீனமடைந்து வருவதால், பூமி நிலையானது அல்ல என்பதை நினைவூட்டியுள்ளது.
பூமியின் காந்தபுலம் சூரியனின் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்தும், விண்வெளியில் இருந்து விழும் விண்கற்கள், சிறுகோள்கள் போன்றவற்றில் இருந்தும் புவி என்ற கிரகத்தைப் பாதுகாக்கும் கவசமாகச் செயல்படுகிறது.. ஆனால், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையால் காந்த கவசம் வழக்கத்திற்கு மாறாகப் பலவீனமாகியுள்ளது.. இந்த ஒழுங்கின்மை மெல்ல விரிவடைந்து வருவதாகவும், மேற்கு நோக்கி நகர்ந்தும் வருவதையும் நாசா கூறியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை, பரப்பளவில் கணிசமான அளவுக்கு விரிவடைந்து வருவதை செயற்கைக்கோள் அளவீடுகள் காட்டுகின்றன. இதன் மையப் பள்ளி ஆப்பிரிக்காவில் இருந்து தென் அமெரிக்காவை நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
நாசா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், South Atlantic Anomaly மெதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்ததோடு, காந்தப்புலத்தை பலவீனமாக்கி மேற்கு நோக்கி நகர்வதை உறுதிபடுத்தியுள்ளது. காந்தக் கவசம் ஒரு மென்மையான குமிழியை உருவாக்குவதற்குப் பதிலாக, தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் சாய்கிறது. இந்தச் சாய்வுதான் காந்த கவசம் தனது வலிமையை மெல்ல இழந்து வருவதைக் குறிக்கும் அறிகுறி.
இது வான்ஆலன் கதிர்வீச்சு பெல்ட்டில் இருந்து வரும் துகள்கள், காந்த கவசத்திற்குள் ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது. இதன் காரணமாகச் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மைக்குள் நுழைவதை ஆபத்தானதாக மாற்றிவிடும். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு அடியில் ஏற்படும் நீரோட்டங்கள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஒழுங்கின்மையை உருவாக்கும் நிலைமைகளை உருவாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அதனை ஆழமாக அறிந்து கொள்வது, பல நூற்றாண்டுகளாகக் காந்தப்புலம் எவ்வாறு உருவாகிறது என்பதையும், எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
இந்த ஒழுங்கின்மை தரையில் உள்ள மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், உலகளாவிய தொழில்நுட்பத்தை, நுட்பமான வழிகளில் பாதிக்கிறது.
குறிப்பாக ஜிபிஎஸ் துல்லியம், ரேடியோ தகவல்தொடர்புகள், காலநிலை தொடர்பான மாதிரிகள், நிலையான காந்தப்புலத் தரவைப் பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், அது பலவீனப்படுவது தகவல் பரிமாற்றத்தின் துல்லியத்தை குறைத்துவிடும். தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை, பூமி நிலையானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
















