சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் நல்வாழ்வுத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் பொருளாதார ரீதியாக வருவாயை ஈட்டும் வகையிலும் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை சிறையில் நூல் பேண்டேஜ் மற்றும் அலுவலக கவர்களும், வேலூர் சிறையில் காலணிகளும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதால் மதுரை சிறையின் அப்போதைய எஸ்.பி ஊர்மிளா மற்றும் தொடர்புடைய அனைவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது போன்ற ஊழல்களை தடுக்க சிறைத்துறை பிறப்பித்த உத்தரவால் சிறைத் தயாரிப்புப் பொருட்கள் அனைத்தும் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சிறைச் சாலைகள் நேரடியாக அரசுத்துறைகளில் ஆர்டர்கள் பெறக்கூடாது எனவும், டிஜிபி அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பித்து மட்டுமே பொருட்களைப் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடைமுறைகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், எந்தப் பொருட்களும் உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு மத்திய சிறைச்சாலைகள் தள்ளப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதன் மூலம் அரசின் வருவாய்க்கு மட்டுமல்லாது கைதிகளுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நடைபெறக்கூடிய ஊழல்கள் தடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும், நடைமுறை என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், தாமதத்தை ஏற்படுத்துவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறைச்சாலைகளில் இருந்தபடி வருவாய் ஈட்டும் வகையில் கைதிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.
















