ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் மாணவியின் பெற்றோர் ஆவேசமாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரத்தில் ஒருதலைக் காதலால் 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சந்தித்து ஆறுதல் கூறினார். கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மாணவியின் தாயார், “அப்படித்தான் காலம் பூரா சொல்றீங்க…. ஆனா ஒரு நடவடிக்கையும் காணோம்” என்று கோபத்துடன் கூறினார்.
இதையடுத்து, கொலையான மாணவியின் தந்தையும், “எங்களுக்கு நீங்கள் தரும் நிதி உதவி எதுவும் வேண்டாம், எங்களுக்கு நீதிதான் வேண்டும்” என்றுகறாராக வலியுறுத்தினார்.
இதனால் அங்கிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும் மற்ற திமுக நிர்வாகிகளும் செய்வதறியாது திகைத்தனர்.
















