சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தத் தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இளையராஜா தரப்பு, சமூக வலைதளத்தில் ரீல்ஸ், மீம்ஸ்களுக்காக அனுமதியின்றி இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் சில அவதூறு கருத்துகள் பதிவிடப்படுவதாக வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
மேலும், அமேசான், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டார்.
















