ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த சூழல் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஒரு நாடு பொருளாதாரத்தில் நிலைத்து நிற்பதற்கு, முதியவர்களும் இளைஞர்களும் சமமான எண்ணிக்கையில் இருப்பது அவசியம். அனுபவமும், இளைய சமுதாயமும் கைக்கோர்க்கும் போது தான், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அசைக்க முடியாத அளவுக்கு வலுப்பட்டு நிற்கும். உலகின் முன்னணி நாடாக அறியப்பட்ட ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை வகிப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஏனென்றால், வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்திய ஜப்பான், நாட்டில் முதியவர்கள் எண்ணிகையை கூடிக்கொண்டே சென்றதை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவை இன்று எதிர்கொண்டு வருகிறது. ஜப்பான் எப்படி சரிவை சந்தித்ததோ, அதே போன்றதொரு சூழல் தான் ஜரோப்பிய நாடுகளில் தற்போது உருவாகியிருக்கிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போலந்து போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்திருக்கிறது. 2024-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில், 3 லட்சத்து 18 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பதாகவும், 1941 – ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால், இதுவே குறைந்த எண்ணிக்கை எனவும் தெரிய வந்திருக்கிறது.
எதனால் கருவுறுதல் விகிதம் குறைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால், பொருளாதார அழுத்தம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றால் குழந்தை பெற்றுகொள்வதை தாய்மார்கள் தள்ளிப்போடுவதாகவும், இதனால் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் கூடிக்கொண்டே செல்வதாகவும் காரணத்தை குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
ஸ்பெயின், இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் பாதி கிராமங்கள் இப்போதே காலியாகி விட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மக்கள்தொகை பாதியளவாகக் குறைந்து விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கூடுதல் மகப்பேறு விடுப்பு, நிதி உதவிகளை வாரி வழங்குவது என எந்தக் குட்டிக்கரணம் போட்டாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படவில்லை என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
இளைஞர்கள் நல்ல வேலை தேடி ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். பெண்களோ குடும்பம் வலுவான பொருளாதார நிலையை அடையும் வரை, குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதையெல்லாம் சரிபடுத்த வேண்டிய அரசாங்கமோ கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
ஏஐ மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை வைத்துச் சேதாரத்தை குறைக்கலாம். ஆனால் மனிதர்கள் மனிதர்கள் தான் என அழுத்தமாகத் தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வலுவான பொருளாதார கொள்கைகளை வகுத்தால் தவிர, பழைய சூழலை மீட்டெடுப்பது கடினம் எனக் கூறும் அவர்கள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சரியான திசையில் பயணிப்பதாகவும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
















