கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 7.11 கோடி ரூபாய் ஏடிஎம் கொள்ளையில் புதிய திருப்பமாகப் போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பெங்களூரில் ஜேபி நகரில் தனியாருக்கு சொந்தமான வங்கி உள்ளது. இந்தவங்கிக்குச் சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியைச் சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வழக்கம் போல், வங்கியில் இருந்து 7.11 கோடி ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் உட்பட இரு ஆயுத பாதுகாவலர்கள் வேனில் சென்றனர்.
தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்ட கொள்ளையர்கள் வேனை வழிமறித்தனர். ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனக்கூறியதுடன் பணப்பெட்டியையும் ஏடிஎம்களில் பணம் நிரப்ப சென்ற ஊழியர், காவலர் மற்றும் டிரைவரையும் காரில் ஏற்றிக் கொண்டனர். அதன்பிறகு டெய்ரி சர்க்கிள் அருகே அவர்களை இறக்கிவிட்ட கொள்ளையர்கள் 7.11 கோடியுடன் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க எட்டு சிறப்பு குழுக்கள் மற்றும் சுமார் 200 போலீசார் நியமிக்கப் பட்டனர்.
விசாரணையில் கொள்ளைச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து தான் சி.எம்.எஸ் வாகன ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கொள்ளையர்களை எதிர்த்து எந்த வித எதிர் தாக்குதலை நடத்தாமல், பாதுகாப்புக்குச் சென்ற காவலர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்தது.
கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை அடையாளம் காண பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. பெங்களூரு நகரம் முழுவதும் தீவிர ‘தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, சி.எம்.எஸ் வாகனத்தை ஒட்டிய டிரைவர், உடன் சென்ற அந்நிறுவன ஊழியர் மற்றும் பணியாளர், பாதுகாவலர்கள் என நால்வரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு பணி முடிந்து அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த கோவிந்தராஜநகர் காவல் நிலைய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப் பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் இவருக்குச் சொந்தமானது என்றும், டிரைவரும் இவரும் நண்பர்கள் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கொள்ளை நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மொபைல் டவர் அழைப்பு விவர பதிவுகளில் கான்ஸ்டபிளும் முன்னாள் ஊழியரும் கொள்ளை நடந்த நேரத்திலும் அதற்கு முந்தைய நாட்களில் தொடர்ந்து தொடர்பில் இருந்ததையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
















