உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திக்கை காண, அவரது வருங்கால மனைவி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த அறைக்குச் சென்ற இருவரும், அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்றி விட்டு நடனமாடியுள்ளனர்.
இதனை அங்கிருந்த நோயாளிகள் வீடியோவாக எடுத்துப் பதிவேற்ற வைரலானது. ப்ரீத் இதனைக் கண்ட பலரும், மருத்துவர் வக்கார் சித்திக்கின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து விசாரணைக்குப் பின்னர் மருத்துவர் வக்கார் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
















