திரைப்படங்களை அதிக விலைக்கு வாங்கும் வழக்கத்தை மாற்றி, இனி அதிக வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் தயாரிப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ள Netflix நிறுவனத்தின் புதிய உத்தி, திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், OTT தளங்கள் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகத் திரைப்படங்களை வரலாறு காணாத விலைக்கு வாங்கின. இது தயாரிப்பாளர்களுக்கு உடனடி லாபத்தைத் தந்தாலும், சினிமா சந்தையில் பல பின்னடைவுகளை உருவாக்கியது.
நடிகர்களின் சம்பளம் மற்றும் படங்களின் பட்ஜெட் தாறுமாறாக உயர்ந்ததுடன், தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் சந்தை மதிப்பு சரியத் தொடங்கியது. அதே சமயம், பெரிய விலைக்கு வாங்கப்பட்ட பல படங்கள் திரையரங்கில் தோல்வியைத் தழுவியதால், OTT தளங்களும் எதிர்பார்த்த பார்வையாளர்களை பெறாமல் பெரும் இழப்புகளைச் சந்தித்தன.
இந்த இழப்புகளின் காரணமாக, ஓ.டி.டி. தளங்கள் தற்போது படங்களை வாங்கும் உத்திகளைக் கடுமையாக்கியுள்ளன. பல நிபந்தனைகளைச் சேர்ப்பதுடன், ஒரிஜினல் படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், ஹைதராபாத்தில் பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ள Netflix, இனி வெளி தயாரிப்பாளர்களின் பெரிய படங்களை அதிக விலைக்கு வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, சொந்தமாக வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருந்த Netflix-ன் இந்தக் கொள்கை மாற்றம், பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் வருவாயை நேரடியாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், வெறும் எதிர்பார்ப்பு, நட்சத்திர கவர்ச்சியை மட்டுமே நம்பியிருக்காமல், உண்மையிலேயே தரமான படங்களை வழங்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இனி நிலைத்து நிற்க முடியும் என்ற புதிய யதார்த்தம் உருவாகியுள்ளது.
















