நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கட்டுக்கட்டாகப் பணமும், கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி ஊழல் மற்றும் முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஜார்க்கண்டில் 18 இடங்களிலும், மேற்குவங்கத்தில் 24 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, அரசு பொதுத்துறை நிறுவனமான பிசிசிஎல்லுடன் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் தேவ் பிரபா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கருப்பு நிலக்கரி வர்த்தகம், முறையற்ற ஒப்பந்தங்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனையானது நடத்தப்பட்டது.
தொழிலதிபர்கள் அனில் கோயல், சஞ்சய் கேம்கா, பினோத் மஹாதோ, சன்னி கேஷரி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் கட்டுக் கட்டாகப் பணமும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, முக்கிய ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை விவரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
















