கடலூரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், பேருந்து நிலையம் அமையக்கூடாது என அவசர அவசரமாக மருதம் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள 20 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள எம்.புதூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். கடலூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்புக்கு மத்தியில், பேருந்து நிலைய பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக ஆட்சியில், ஆட்சியர் அலுவலகம் அருகே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துவிட கூடாது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவசர அவசரமாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
















