இந்தியாவின் சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்கி அஜர்பைஜானுக்கு கிலி ஏற்படுத்த, ஆர்மீனியா முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் JF-17 விமானங்களை வாங்கி அஜர்பைஜான் போக்கு காட்டிய நிலையில், இந்தியாவுடன் ராணுவ தளவாட பேச்சுவார்த்தை நடத்தி ஆர்மீனியா அதிரடி காட்டியிருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்தியா – பாகிஸ்தானை போன்றே ஆர்மீனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். சோவியத் யூனியன் உடைந்தபோது அஜர்பைஜானும், ஆர்மீனியாவும் தனித்தனி குடியரசு நாடுகளாக உருவாகின. ஆனால் சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோதே அஜர்பைஜானும் – ஆர்மீனியாவும் மோதிக்கொண்டு தான் இருந்தன.
அந்த மோதலுக்குக் காரணம், இரு நாடுகளையும் பிரிக்கும் நார்கோனா – காராபாத் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தான். இதனால் இருநாடுகளுக்கும் இடையே 1988 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் கடுமையான போர் நடைபெற்றன. ஆர்மீனியாவில் கிறிஸ்தவர்களும், அஜர்பைஜானில் இஸ்லாமியர்களும் அதிகளவில் வாழ்ந்து வருவதும் மோதலுக்கு ஓர் முக்கிய காரணம்.
அஜர்பைஜானில் எண்ணெய் வளமும், ஆர்மீனியாவில் தங்களது ராணுவ தளமும் உள்ளதால், இருதரப்பிடமுமே ரஷ்யா நட்புப் பாராட்டு வருகிறது. இருநாடுகளின் தேவையும் முக்கியம் என்பதால், மோதலில் என்ன செய்வதென்று புரியாமல் ரஷ்யா விழிபிதுங்கி நிற்கிறது. இந்நிலையில், இந்தியாவின் அதீத போர் திறன் கொண்ட விமானங்களில் ஒன்றான சுகோய் 30 MKI-ஐ வாங்க ஆர்மீனியா ஆர்வம் காட்டியிருக்கிறது.
காரணம், எதிரி நாடான அஜர்பைஜான், பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களை வாங்கியிருப்பதே. மொத்தம் 40 JF-17 போர் விமானங்களை அஜர்பைஜான் வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த ஆர்மீனியா இந்தியாவின் போர் குதிரையான சுகோய் 30 MKIயின் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது.
இதற்காக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஆர்மீனியா ராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தளவாடங்கள் கொள்முதல் செய்த வரலாறு பிறக்கும் எனக் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக ரஷ்யாவின் துணை கைவிட்டு போவதாக நினைக்கும் ஆர்மீனியா, இந்தியாவின் உதவியை நாட தொடங்கியிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் பினாகா ராக்கெட், ஸ்வாதி ரேடார்களை வாங்கி குவிக்கும் ஆர்மீனியா, தற்போது சுகோய் 30 MKI போர் விமானங்களையும் வாங்க முனைப்பு காட்டியுள்ளது.
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சுகோய் போர் விமானங்கள் வரும் 2027-ம் ஆண்டு முதல் ஆர்மீனியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு முதல் Astra Mk-2 and Mk-3 போன்ற அதிக எடை கொண்ட ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் வகையில், சுகோய் ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், மேலும் பல நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் போடும் என்றே பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
















