வெல்ல முடியாது என்று கூறப்பட்ட சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுறுவிக் கிழித்து அழித்த இந்தியாவின் வெற்றியையும் சீனாவின் தோல்வியையும் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் வெளிவந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன PL-15E ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய இந்த ஏவுகணைகளை நாடு வானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது.
குறிப்பாக JF-17 போர் விமானம் மூலம் பாகிஸ்தான் ஏவிய PL-15E ரக ஏவுகணைகளில் வெடிக்காத ஒன்று பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் இந்திய விமானப் படையினரால் மீட்கப் பட்டது. சீனாவின் ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது இந்தியாவுக்கு நல்லதாக அமைந்து விட்டது.
அதனால், சீன ஏவுகணையின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் தயாராகி உள்ளது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கண்டறிந்து தடுத்து அழிக்க முடியும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சீனாவிடமிருந்து YL-8E ரேடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தான் வாங்கி இருந்தது.
ஆனால்,ஆப்ரேஷன் சிந்தூரில் சீனாவின் இந்த வான்பாதுகாப்பு அமைப்பையும் தாண்டிப் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியாவின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய ‘ஸ்கால்ப் குரூஸ்’ ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ரேடாரில் தென்படாமல் துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் தான், 2025 துணைக் கண்ட மோதலில் வான் மற்றும் ஏவுகணைப் போர்: கண்காணிப்பு மற்றும் விளைவுகள்” என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் JF-17 பிளாக்-III போர் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட சீனாவின் CM-400 ஏவுகணைகளை இந்திய மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பராக்-8 வனப்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தி அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவின் YL-8E ரேடார், நூர் கான், சர்கோதா மற்றும் ஜகோபாபாத்தில் உள்ள முக்கியமான விமானத் தளங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட சீனாவால் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை HQ-9BE மற்றும் HQ-16FE ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், இந்திய ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்று அந்த அறிக்கையில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் தொழில்நுட்பம் ஒரு காகிதப் புலி என்பதை ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா நிரூபித்தது. அதையே ஆஸ்திரேலியாவின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
















