துபாய் விமான கண்காட்சியில் சாகசம் புரிந்த தேஜஸ் இலகு ரக விமானம் (LCA Mk-1) திடீரென விபத்துக்குள்ளானதில் 34 வயதான இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் பங்கேற்ற விங் கமாண்டர் நமன்ஷ் சியால், தேஜஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகச் சிரித்த முகத்தோடு செல்லும் வீடியோ வைரலான சில நிமிடங்களிலே அவர் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதித் தீப்பிடித்து எரியும் வீடியோவும் வைரலானது.
தந்தையிடம் தனது விமான சாகச நிகழ்ச்சியை ஆன்லைனில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டதால் யூடியூப்பில் விமான கண்காட்சி நேரலையைத் தேடத் தொடங்கிய நமன்ஷ் சியால் தந்தை ஜெகன் நாத் சியால், தனது மகன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து துடிதுடித்துப் போயிருக்கிறார்.
உடனடியாக, விங் கமாண்டரான தனது மருமகளுக்கு போன் செய்து, என்ன நடந்தது என்று கேட்டதாகக் கூறியுள்ள ஜெகன் நாத் சியால், 6 விமானப் படை அதிகாரிகள் நேரில் வந்து விபத்தில் நமன்ஷ் சியால் பலியானதை உறுதி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
சைனிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த நமன்ஷ் சியால், 2009ம் ஆண்டு NDA தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பாதுகாப்புப் படையில் சேர்ந்ததாகவும் படிப்பில் சிறந்து விளங்கியதாகவும் ஒழுக்கத்திலும் தேச சேவையிலும் உண்மையாக இருந்தததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையைப் பற்றிப் பெரிய கனவுகளைக் கொண்டிருந்த நமன்ஷ் சியால் மரணம் தங்கள் குடும்பத்தை முற்றிலுமாகச் சிதைத்து விட்டதாகவும் சியோலின் தந்தை கூறியுள்ளார்.
ஜெகன் நாத்தும் அவரது மனைவி வீணா சியலும் தற்போது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள நமன்ஷின் வீட்டில் உள்ளனர். இருவரும் தங்கள் ஏழு வயது பேத்தி ஆர்யா சியாலைக் கவனித்துக் கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கோவைக்கு வந்துள்ளனர். நமன்ஷ் சியால் மனைவி தற்போது கொல்கத்தாவில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தத் துயரச் சம்பவத்தால், நமன்ஷ் சியாலின் சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசத்தில் பாட்டியல்கர் கிராமமே துக்கத்தில் மூழ்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் மருத்துவப் படையில் பணியாற்றிப் பின்னர் கல்வித் துறையில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற தந்தை மற்றும் ஐ.ஏ.எஃப் அதிகாரியான மனைவி மற்றும் 6 வயது மகளுடன் வசித்த வந்த நமன்ஷ் சியாலுக்கு பதிவு உயர்வு வழங்கப்பட இருந்த சுழலில் துரதிர்ஷ்டமாக விமான விபத்தில் மரணமடைந்துள்ளார்.
முன்னதாக, விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிர் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிதுள்ள இந்திய விமானப் படை, இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் உறுதியாக நிற்பதாகவும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல் முறையைச் செய்ய முயற்சித்ததாகத் தெரிகிறது.
இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலை கீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும்.
ஆனால் அதுபோன்று நடக்கவில்லை. விமானம் மீண்டும் மேலே செல்லமுயன்றபோது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
















