கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மை செயலருக்கு, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலர் சரோஜினி சர்மா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த 2024ஆம் ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் இடையே 50 சதவீதம் வீதம் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் கடிதம் அனுப்பி ஒப்புதல் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மெட்ரோ ரயில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி விரிவான திட்ட அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டது என்றும்,
நகர்ப்புற வழித்தடத்தில் இயக்கப்படும் சராசரி வேகம், மெட்ரோ வேகத்துக்கு சமமாகவே இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
வழித்தடத்துக்கான சாலை வசதி 22 மீட்டர் அகலத்துக்கு இருக்க வேண்டும் என்றும்,
22 மீட்டர் அகலம் சாலை இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ரோ செல்லும் வழித்தடங்களில் உள்ள கட்டட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலத்தை பெறுவதற்கு அதிக பொருட்செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகையின்படி தற்போது மக்கள் தொகை எவ்வளவு, கோவைக்கு எந்தெந்த நகரங்களில் இருந்து வந்து செல்கின்றனர், எந்தெந்த வகைகளில் மெட்ரோ ரயில் அவசியம் என்ற கூடுதல் அறிக்கையை இணைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் செல்வர் என கணித்திருப்பது அதிகபட்சமாக இருக்கிறது என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்து மற்றும் கார்களில் பயணிப்பவர்கள், மெட்ரோவுக்கு மாறுவரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணியர் செல்வர் என்றால், அந்த வழித்தடத்தில் இதர வாகனங்கள் அனுமதிக்கப்படாதா என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
















