மதுரையில் சாலையோர சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி பாமா நகர் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் சந்தையில் 300-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வந்தனர்.
இதற்குக் குடியிருப்புச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி வேறு இடத்திற்கு சந்தையை மாற்ற முடிவு செய்து கடந்த 2024-ல் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியின் ஆதரவுடன் கடைகளை அமைக்க விடாமல் போலீசார் தடுப்பதாகக் குற்றம்சாட்டி கடந்த 2 வாரமாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மூன்றாவது வாரமாகக் காய்கறி சந்தை அமைப்பதற்காக வியாபாரிகள் வருகை தந்தனர்.
அப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம்மூலம் ராட்சத குழாய்களை வைத்துத் தடுப்பு அமைத்தனர்.
தொடர்ந்து அதிகாரிகளை கண்டித்து சாலையில் அமர்ந்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அப்போது ஏராளமான பெண் வியாபாரிகளுக்குக் காயம் ஏற்பட்டது.
















