தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதான வழிகளில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாகத் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் தூத்துக்குடியின் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகெ சன்னிதான தெரு, டி.பி சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கியது.
கழிவுநீருடன் கலந்தபடி மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்த பக்தர்கள் வேறுவழியின்றி அந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே தேங்கிய நீரை அகற்ற மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
















