கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தவெக நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















