பாகிஸ்தானின் அணுசக்தி நாயகனாக அறியப்பட்ட அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்ட விவரங்களை வெளிநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்ததை அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.
பாகிஸ்தானில் தனது இறுதி மூச்சு வரை ஹீரோவாக வலம் வந்த அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்டங்களில் கைத்தேர்ந்தவராக இருந்தவர். 2021-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வரை, அவர் போற்றப்பட்டு வந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின்னர், அவர் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்தவர் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது.
அதில் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியது என்னவென்றால், கள்ளச்சந்தையில் அணுசக்தி ரகசியங்களை அப்துல் காதீர் கான் கசியவட்டது தான். ஈரான், வடகொரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கும், சில தீய சக்திகளுக்கும் அணுசக்தி நுட்பங்களை ஏ.கே. கான் விற்பனைசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டட நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜேம்ஸ் லாயர் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அணு ஆயுத விற்பனையை தடுப்பதற்காக சிஐஏ நியமித்த உளவு குழுவில் இடம்பெற்றிருந்த ஜேம்ஸ் லாயர், ஆரம்பத்தில் ஐரோப்பிய பகுதிகளில் உளவு வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர், அப்துல் காதீர் கானின் சட்டவிரோத செயல்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் லாயர், தற்போது பல்வேறு உண்மைகளை உலகிற்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.
அப்துல் காதீர் கானை மரண வியாபாரிஎனக் குறிப்பிடும் ஜேம்ஸ் லாயர், ரகசியமாக அணுசக்தி நுட்பங்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதிகளுக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் பணம் பகிரப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில், அப்துல் காதீர் கானின் குற்றச்செயலை கண்டறியதடுமாறியதாகக் குறிப்பிட்டுள்ளள ஜேம்ஸ் லாயர், லிபியாவுக்கு அணுசக்தி திட்டங்களை பகிர்ந்த விவகாரத்தில் ஏ.கே.கான் அப்பட்டமாக மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க உளவு குழுவினர், BBC CHINA சரக்கு கப்பலில் சல்லடைபோட்டுத் தேடிய போது, அணுஆயுத உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் இருந்ததை கண்டறிந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அப்துல் காதீர் கான் பின்னணியில் இருப்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப் கவனத்திற்கு, இந்த விவகாரத்தை கொண்டு சென்ற போது, அப்துல் காதீர் கான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதையும் ஜேம்ஸ் லாயர் நினைவுகூர்ந்துள்ளார்.
தனது அரசுக்கு துரோகம் செய்த ஏ.கே.கானை கொலை செய்யும் அளவுக்கு பர்வேஸ் முஸாரப் ஆத்திரத்தில் இருந்ததாகவும் ஜேம்ஸ் லாயர் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் உடைய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்த அப்துல் கதீர் கானின் சட்டவிரோத காரியங்கள், அண்மை காலமாக வெட்ட வெளிச்சமாகி வருவதால், பாகிஸ்தான் மக்களுக்கு வில்லனாக தெரிய தொடங்கியிருக்கிறார் அணுசக்தி நாயகன்.
















