டெல்லியில் மோசமான காற்று மாசுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நக்சலைட் மத்வி ஹித்மாவின் புகைப்பட போஸ்டர்களுடன் முழக்கங்களை எழுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர்கள் மீதும் பெப்பர் ஸ்பிரே தூவி சம்பவமும் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுக்கு எதிராக அரசைக் கண்டித்து இந்தியா கேட்டின் முன்பு போராட்டம் நடைபெறும் என அறிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா கேட் பகுதி எப்போதும் பிரிவு 163-ன் கீழ் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் எந்தவொரு போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா கேட் அருகில் அனுமதியின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கலைந்து போகச் சொன்ன காவல்துறையினர் மீதும், தூய்மை பணியாளர்கள் மீதும் பெப்பர் ஸ்ப்ரே தூவி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சில காவல்துறையினர் உட்பட தூய்மை பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறையினர் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இது தொடர்பாக இரண்டு FIRகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். போராட்டம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், போராட்டக்காரர்களின் நிஜமுகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம், மாவோயிஸ்டுக்கு ஆதரவான போராட்டம் என்று தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் 18ம் தேதி, ஆந்திரப் பிரதேச காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி மத்வி ஹித்மாவின் ஓவியம் வரைந்த போஸ்டரை போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மாணவர் ஏந்தியுள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதியை புகழ்ந்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பழங்குடியினத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஹித்மா , தனது உரிமைப் போருக்காக ஆயுதங்களை எடுத்தார் என்றும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏற்க முடியாது என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மாணவர் கூறியுள்ளார்.
உதடுகளில் சிவப்பு வணக்க வாசகங்களுடன் சமூக ஆர்வலர்களாகக் காட்டிக் கொள்ளும் ஜிஹாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் புதிய முகம் தான் டெல்லி போராட்டக்காரர்கள் என்று டெல்லி மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாட்டை விட, மார்க்ஸ் மற்றும் மாவோவின் மாசுபாடு இடதுசாரி கொள்கையுடைய மாணவர்களின் மூளையில் அடர்த்தியாக உள்ளது என்றும், தீவிரவாதிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் கனவு காண்பதாகவும் அது மிகவும் ஆபத்தானது என்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புப் படையினர் மீது 36 கொடூரத் தாக்குதல்களை நடத்திய ஒரு மாவோயிஸ்ட்டை இந்தியா கேட்டில் நின்றபடி புகழ்ந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















