டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு கிட்டதட்ட 2 வாரங்கள் கடந்துவிட்டன. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியானபடியே உள்ளன. அதில் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும்படியாக உள்ளன. இந்தச் சூழலில், டெல்லி தாக்குலை நடத்திய உமர் நபி மற்றும் அவரது கூட்டாளிகளின் சித்தாந்தம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அடிப்படையில் உமர் நபி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவராக இருந்துள்ளார். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய உலகளவிலான இஸ்லாமிய அரசை அமைப்பதுதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலக்கு. மேலும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி, அன்சார் கஸ்வாதுல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகிர் மூஸா ஆகியோரை உமர் நபி முன்மாதிரியாகக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அவரின் கூட்டாளிகள் பலர் அல்கொய்தாவின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர்.
குறிப்பாக, காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த முஸமில் ஷகீல் கனாய், அனந்த்நாக் பகுதியை சேர்ந்த அடீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த ஷாஹீன் சயீத் உள்ளிட்டோர் அல்கொய்தா அமைப்பின் சித்தாந்தத்தின்படி இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், உமர் நபி தனது கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக, காஷ்மீரில் நடைபெற்ற அடீல் அகமது ராதரின் திருமணத்தில்கூட உமர் நபி பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் காஷ்மீரில் மதகுருவான Mufti Irfan Waga கைது செய்யப்பட்டார். உடனடியாக, உமர் நபி கடந்த மாதம் 18ம் தேதி காஷ்மீர் கிளம்பி சென்று, தனது கூட்டாளிகளை சந்தித்துள்ளார். அப்போது, அவர்களிடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
காஷ்மீரில் இருந்த உமரின் கூட்டாளிகள் தங்களை அன்சார் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பை சேர்ந்தவர்களாக அழைத்துகொண்டனர். இந்த அமைப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதப்படுகிறது. காஷ்மீரில் உமர் நபி மற்றும் அவரது கூட்டாளிகள் இடையே சந்திப்பு நடந்த 3 வாரத்தில்தான் டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அறையின் சாவியை, உமர் நபியும், முஸமில் ஷகீல் கனாயும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் இருந்த ரசாயனங்களை கொண்டு உமர் நபி சோதனைகளில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















