முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனிக்கட்சி தொடங்கப்படும் என அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வைத்திலிங்கம், அதிமுகவுக்குள் உட்கட்சி பிரச்னை தலை தூக்கி வருவதாக தெரிவித்தார். இன்னும் ஒரு மாதத்திற்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடக்கவில்லை என்றால் ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, கட்சியாக மாற்றப்படும் என வைத்திலிங்கம் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனிக்கட்சி என்ற முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். மேலும், டிசம்பர் 15ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
















